Monday, June 1, 2009

நத்தைக்கூடு - சிறுகதை

(குறிப்பு: இந்த சிறுகதை நான் எழுதும் முதல்கதை என்பதால் இதை தயை கூர்ந்து படித்து பொறுத்தருளவும்.)
அன்புடன் லோசனி

கூட்டுக்குள் உடலை உள்ளிழுத்துக்கொள்ளும் நத்தையாய் நாலு சுவர்களுக்குள் அவன் உலகம் சுருங்கிப்போனது.

"பிளஸ் 2 போகனும்னா, ஏதாச்சும் வேலையைப்பாரு... பீஸ் கட்டவாவது பணம் வேணும்ல... என்னை எதிர்பார்க்காதடா... உன் அத்தானிடம் இருந்து பத்து பைசா கூட கறக்க முடியாது"

அக்கா ஹரிப்பிரியாவின் வார்த்தைகள் கொஞ்சம் கடினமாகவே இருந்தது. அத்தான் வீட்டோட மாப்பிள்ளையாகவே இருந்தார். சேல்ஸ் ரெப் வேலை. அவர் சம்பளத்துக்கு வாடகை வீடெல்லாம் ஒத்து வராது.

செல்வேந்திரனுக்கு படிக்கவேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது. சாப்ட்வேர் என்ஜினியராகி... புதியதாய் ஏதாவது மென்பொருளை உருவாக்க வேண்டும் என்ற ஆசையும், கூடவே உலகத்தை சுற்றவேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.

ஆனால் பிளஸ்2வில் கால் வைக்கவே இவ்வளவு தடுமாற்றம்... என்னடா செய்யலாம் என்று யோசித்த போதுதான் முருகன் அந்த யோசனையை சொன்னான்.

"மாப்பிள்ளே... காசுக்காக என்னவேணாலும் செய்யலாம்டா... ஆனா அது ஒழுக்கமா இருக்கனும்... என்னைப்பாரு, இப்போ கொத்தனார் வேலை பார்க்கிறேன். 150 ரூபா சம்பளமா கிடைக்குது. நீயும் வாடா... ஒரு நாளைக்கு சித்தாள் சம்பளமா 80 ரூபா வாங்கலாம். 2 மாசம் வேலையை பாரு... அதில கிடைக்கிற காசில் பள்ளிக்கூட பீஸ் கட்டலாம்" என்றான்.

அவன் சொன்னது கூட செல்வேந்திரனுக்கு சரியாகதான் பட்டது. மறுநாளே வேலைக்கு ஆஜர். இப்படி வேலையெல்லாம் அவன் பார்த்ததில்லை என்பதால் 10 நாட்கள் வேதனையாக தான் இருந்தது. அப்புறம் பழக்கமாகிவிட்டது.

அவன் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம் அன்று தான் நிகழ்ந்தது.

தலையில் 11 செங்கற்களை சுமந்து கொண்டு இரண்டாவது மாடிப்படியேறிக்கொண்டிருந்த செல்வேந்திரன் கால் இடறி தலைகுப்புற விழுந்தான்.

அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், "எங்கே போனாலும் குணம் ஆகாதுங்க... இவன் இனி படுத்த படுக்கை தான். முதுகெழும்புக்கு வர்ற நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கு.. கால்கள் இனி செயல்படாது. ஏதோ பெயருக்கு வேணா வாழ்க்கையை நகர்த்தலாம்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

அந்த நாள் தொலைந்து போய் கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆகிறது. பாசம் ஒருபுறம் இருந்தாலும், மற்றவர்கள் ஏளனம் பேசிடக்கூடாது என்பதற்காகவே செல்வேந்திரனை, ஒரு குழந்தையை போல குளிக்கவைப்பதும், கழிப்பிடத்துக்கு அழைத்து செல்வதுமாக இருந்தாள் ஹரிப்பிரியா.

செல்வேந்திரனை பார்ப்பதற்காக அடிக்கடி பள்ளியின் கம்யூட்டர் சயின்ஸ் டீச்சர் வினோதினி வந்திட்டு போவாள் (லவ்வெல்லாம் நம்ம கதையில ஸ்டார்ட் ஆகாதுங்க. தைரியமாக படிங்க) அவளுக்கு செல்வேந்திரன் மீது அளவு கடந்த பாசம். ஒரே மகன் சாலைவிபத்தில் இறந்து போக... அவனுடைய உடல் அங்கங்களை தானமாக கொடுத்த அற்புதமான மனம் படைத்தவர்.

"இங்கே பார் செல்வேந்திரா... இப்படியே இருந்தா எதுவும் செய்ய முடியாது. நான் ஒரு கணினி வாங்கி கொடுக்கிறேன். அதை வச்சுக்கோ... உனக்குள்ள திறமைகளை நீ வெளிக்கொண்டு வர வாய்ப்பா அமையும். நீ விரும்பின மாதிரி உலகத்தை இந்த சின்ன பெட்டிக்குள்ளேயே பார்க்கலாம்"

ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த அவன்மனத்தீயை தூண்டும் அளவிற்கு தனது வார்த்தைகளை பிரயோகித்தாள் வினோதினி டீச்சர். சொன்னபடியே புதுசாய் ஒரு கணினி வாங்கி கொடுத்து, அதற்கு இணைய இணைப்பையும் பெற்றுத்தந்தாள்.

"நான் இருக்கிறவரைக்கும் இந்த இணையத்துக்கான பில் கட்டுறேன்... அதுக்குள்ள நீ வெளிய வரணும்டா..." என்று நம்பிக்கையூட்டினாள்.

அவனுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது. செல்வேந்திரன் என்ற பெயர் வலைப்பூக்களில் வலம் வரத்துவங்கியது. ஆங்கிலப்பயிற்சி அவனை அமெரிக்கனுடன் பேசத்தூண்டியது. இணையத்தின் வாசல் எவ்வளவு பெரியது என்று பல முறை வியந்து போனான்.

நம்பிக்கையை தூண்டும் அவன் கட்டுரைகளில் ஈர்க்கப்பட்ட, ஒரு டிராவல்ஸ் நிறுவனம் அவனை நேரடியாகவே அழைத்து தனது நிறுவனத்தில் ஆலோசனைக்குழு மேலாளராக நியமித்தது.

பலநாடுகள்.... பயணங்கள் தொடர்கின்றன... டிராவல்ஸ் நிறுவன எம்.டி.யே எத்தனை நாளுக்கு சகோதரிக்கு பாரமாய் இருப்பாய்... உனக்கென வாழ்க்கையை தேர்ந்தெடு... என்று கட்டாயப்படுத்தவே.. அவனுக்காய் பிறந்த யுரேகாவையும் திருமணம் செய்துகொண்டான்.

குடும்பம், வீடு, குழந்தையும் வந்தாச்சு... செல்வேந்தரன் கால்கள் செயலற்று போனதை மறந்து போயிருந்தான். நத்தைக்கூடு போல ஒரு பெட்டிக்குள் துவங்கிய வாழ்க்கை இப்போது உலகின் பல திசைகளில் விரிந்திருந்தது.

மகன் 10 வயதிலேயே லேப்டாப்பில் ஹங்கேரி பையனோடு பேசுகிறான். அதை அவ்வப்போது பார்த்து செல்வேந்திரனுக்குள் மகிழ்ச்சி.

இத்தனையும் இருந்தாலும்... வீட்டின் மாடி போர்சனில் உபயோகப்படுத்தமுடியாத பொருள்களுக்கு மத்தியில் தூங்கிககொண்டிருக்கிறது ஒரு நத்தைக்கூடு.

ஹார்டுடிரைவ் செயலற்றுப்போன நிலையில்.

16 comments:

  1. நல்லதொரு முயற்ச்சி ! தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

    பராசக்தி

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்
    அருமை ....!
    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. மிக அருமையான சிறுகதை போட்டிக்கு அனுப்பவும்

    ReplyDelete
  4. நன்றி நேசமித்திரன், சுரேஷ்... உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. தமிழர்ஸ்... ஏற்கனவே ஓட்டுப்பட்டையை நிறுவிவிட்டேன். நன்றி.

    ReplyDelete
  6. அவன் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம் அன்று தான் நிகழ்ந்தது.

    தலையில் 11 செங்கற்களை சுமந்து கொண்டு இரண்டாவது மாடிப்படியேறிக்கொண்டிருந்த செல்வேந்திரன் கால் இடறி தலைகுப்புற விழுந்தான்.

    ReplyDelete
  7. நல்ல நடை ஓட்டம் ... தன்னம்பிக்கை கரு .. வாழ்த்துக்கள் .. தொடர்ந்து எழுதுங்கள் ...

    ReplyDelete
  8. ungal kathaiyai padithu pinnutamida virumbi post comment click panniya nearathitkkul ungal kavithaigal allavaithuvittana thozzi

    ReplyDelete
  9. தன்னம்பிக்கை டானிக்..தொடர்ந்து கலக்குங்க..

    ReplyDelete
  10. தளர்வு இல்லாமல் மனதிடத்தோட செயல்பட்டால் ஊனம் ஒரு பொருட்டல்ல...கதை நல்லாயிருக்கு...ஆனால் சொல்லிடனும் என்ற அவசரத்தில் அவசர அவசரமாய் சொல்லி முடித்த மாதிரியிருக்கு மத்தப்படி கரு ஒரு தூண்டுகோல் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  11. நன்றி வினோத் அண்ணா.

    ReplyDelete
  12. நன்றி வினு அண்ணா.

    ReplyDelete
  13. நன்றி தமிழரசி.

    ReplyDelete
  14. நன்றி சுரேஷ் குமார் அண்ணா.

    ReplyDelete
  15. என்ன அநியாயம்?!

    ReplyDelete