Tuesday, November 24, 2009

பொய்களே மூலதனம்

வாத்தியார் மன்னிப்பாராக... (போலி ஜோதிடர்களுக்காக எழுதப்பட்ட கவிதை இது. உண்மையான ஜோதிடர்கள் பொருத்துக்கொள்ளவும்)
....................................................................................


செவ்வாய் தோஷங்களும்
ஏழறை சனியும்
உச்சத்தில் இருப்பதாய்
வார்த்தைகள்
சன்னமாய் விழும்...

லொடலொடவென
கொட்டித்தீர்க்கும்
வார்த்தைகளில்
பரிகாரங்களின்
பரிமாற்றங்கள்...

பொய்களை
மூலதனமாக்கி
ஜோதிடர்கள்
சொல்லும் வார்த்தைகளில்
பல முதிர்கன்னிகளின்
பிரசவம்

உலகம் எப்போ அழியும்
போர் எப்போ வரும்..
அடடா...
சுனாமிக்கும் கூட
பிரசன்னம் பார்க்க
ஆரம்பித்து விட்டார்கள்

நடிகைக்கு உதடு
ஜோசியம் பார்த்து
குமுதத்தில்
அட்டைப்பட செய்தி வேறு..

மச்சில் இருக்கும்
கணவான்கெளுக்கெல்லாம்
நாடி ஜோதிடம் சொல்லுவோரே...
குச்சிலில் இருக்கும்
குடியானவன்
கோபுரம் ஏற..
ராசிக்கல் ஏதாச்சும் இருக்கா

கொஞ்சம் பாத்துத்தான் சொல்லுங்களேன்...

Sunday, November 22, 2009

முகங் கோணாதே அன்பே...

நாணலின் கோணலில்
நதிக்கரை மிளிரும்

வீணையின் கோணலில்
சங்கீதம் சுரக்கும்

வெண்ணிலவின் கோணலி்ல்
இரவும் ஒளிரும்

அன்பே..
உன் முகக் கோணலில்
என் இதயம் நொருங்கிறேதே...

Thursday, June 11, 2009

கதவை திற...


கதவை திறந்தேன்
காற்று வரவில்லை
கவிதையாய்
நீ வந்தாய்...

இராமர் பாலம்
இருக்கிறதா...
எனக்கு தெரியாது,
பார்வையிலே ஆயிரம்
பாலங்கள் கட்டி விட்டாய்


அருகில் இருந்து
அலைபேசியில்
இலவச மின்னஞ்சல்
அனுப்பினாய்

தொலைந்து போன
இதயத்தை
மின்னஞ்சலிலாவது
அனுப்பி வை

இப்போது
கதவை திறந்தால்
கவிதை வரவில்லை
கண்ணீர் வருகிறது.


Monday, June 1, 2009

நத்தைக்கூடு - சிறுகதை

(குறிப்பு: இந்த சிறுகதை நான் எழுதும் முதல்கதை என்பதால் இதை தயை கூர்ந்து படித்து பொறுத்தருளவும்.)
அன்புடன் லோசனி

கூட்டுக்குள் உடலை உள்ளிழுத்துக்கொள்ளும் நத்தையாய் நாலு சுவர்களுக்குள் அவன் உலகம் சுருங்கிப்போனது.

"பிளஸ் 2 போகனும்னா, ஏதாச்சும் வேலையைப்பாரு... பீஸ் கட்டவாவது பணம் வேணும்ல... என்னை எதிர்பார்க்காதடா... உன் அத்தானிடம் இருந்து பத்து பைசா கூட கறக்க முடியாது"

அக்கா ஹரிப்பிரியாவின் வார்த்தைகள் கொஞ்சம் கடினமாகவே இருந்தது. அத்தான் வீட்டோட மாப்பிள்ளையாகவே இருந்தார். சேல்ஸ் ரெப் வேலை. அவர் சம்பளத்துக்கு வாடகை வீடெல்லாம் ஒத்து வராது.

செல்வேந்திரனுக்கு படிக்கவேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது. சாப்ட்வேர் என்ஜினியராகி... புதியதாய் ஏதாவது மென்பொருளை உருவாக்க வேண்டும் என்ற ஆசையும், கூடவே உலகத்தை சுற்றவேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.

ஆனால் பிளஸ்2வில் கால் வைக்கவே இவ்வளவு தடுமாற்றம்... என்னடா செய்யலாம் என்று யோசித்த போதுதான் முருகன் அந்த யோசனையை சொன்னான்.

"மாப்பிள்ளே... காசுக்காக என்னவேணாலும் செய்யலாம்டா... ஆனா அது ஒழுக்கமா இருக்கனும்... என்னைப்பாரு, இப்போ கொத்தனார் வேலை பார்க்கிறேன். 150 ரூபா சம்பளமா கிடைக்குது. நீயும் வாடா... ஒரு நாளைக்கு சித்தாள் சம்பளமா 80 ரூபா வாங்கலாம். 2 மாசம் வேலையை பாரு... அதில கிடைக்கிற காசில் பள்ளிக்கூட பீஸ் கட்டலாம்" என்றான்.

அவன் சொன்னது கூட செல்வேந்திரனுக்கு சரியாகதான் பட்டது. மறுநாளே வேலைக்கு ஆஜர். இப்படி வேலையெல்லாம் அவன் பார்த்ததில்லை என்பதால் 10 நாட்கள் வேதனையாக தான் இருந்தது. அப்புறம் பழக்கமாகிவிட்டது.

அவன் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம் அன்று தான் நிகழ்ந்தது.

தலையில் 11 செங்கற்களை சுமந்து கொண்டு இரண்டாவது மாடிப்படியேறிக்கொண்டிருந்த செல்வேந்திரன் கால் இடறி தலைகுப்புற விழுந்தான்.

அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், "எங்கே போனாலும் குணம் ஆகாதுங்க... இவன் இனி படுத்த படுக்கை தான். முதுகெழும்புக்கு வர்ற நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கு.. கால்கள் இனி செயல்படாது. ஏதோ பெயருக்கு வேணா வாழ்க்கையை நகர்த்தலாம்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

அந்த நாள் தொலைந்து போய் கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆகிறது. பாசம் ஒருபுறம் இருந்தாலும், மற்றவர்கள் ஏளனம் பேசிடக்கூடாது என்பதற்காகவே செல்வேந்திரனை, ஒரு குழந்தையை போல குளிக்கவைப்பதும், கழிப்பிடத்துக்கு அழைத்து செல்வதுமாக இருந்தாள் ஹரிப்பிரியா.

செல்வேந்திரனை பார்ப்பதற்காக அடிக்கடி பள்ளியின் கம்யூட்டர் சயின்ஸ் டீச்சர் வினோதினி வந்திட்டு போவாள் (லவ்வெல்லாம் நம்ம கதையில ஸ்டார்ட் ஆகாதுங்க. தைரியமாக படிங்க) அவளுக்கு செல்வேந்திரன் மீது அளவு கடந்த பாசம். ஒரே மகன் சாலைவிபத்தில் இறந்து போக... அவனுடைய உடல் அங்கங்களை தானமாக கொடுத்த அற்புதமான மனம் படைத்தவர்.

"இங்கே பார் செல்வேந்திரா... இப்படியே இருந்தா எதுவும் செய்ய முடியாது. நான் ஒரு கணினி வாங்கி கொடுக்கிறேன். அதை வச்சுக்கோ... உனக்குள்ள திறமைகளை நீ வெளிக்கொண்டு வர வாய்ப்பா அமையும். நீ விரும்பின மாதிரி உலகத்தை இந்த சின்ன பெட்டிக்குள்ளேயே பார்க்கலாம்"

ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த அவன்மனத்தீயை தூண்டும் அளவிற்கு தனது வார்த்தைகளை பிரயோகித்தாள் வினோதினி டீச்சர். சொன்னபடியே புதுசாய் ஒரு கணினி வாங்கி கொடுத்து, அதற்கு இணைய இணைப்பையும் பெற்றுத்தந்தாள்.

"நான் இருக்கிறவரைக்கும் இந்த இணையத்துக்கான பில் கட்டுறேன்... அதுக்குள்ள நீ வெளிய வரணும்டா..." என்று நம்பிக்கையூட்டினாள்.

அவனுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது. செல்வேந்திரன் என்ற பெயர் வலைப்பூக்களில் வலம் வரத்துவங்கியது. ஆங்கிலப்பயிற்சி அவனை அமெரிக்கனுடன் பேசத்தூண்டியது. இணையத்தின் வாசல் எவ்வளவு பெரியது என்று பல முறை வியந்து போனான்.

நம்பிக்கையை தூண்டும் அவன் கட்டுரைகளில் ஈர்க்கப்பட்ட, ஒரு டிராவல்ஸ் நிறுவனம் அவனை நேரடியாகவே அழைத்து தனது நிறுவனத்தில் ஆலோசனைக்குழு மேலாளராக நியமித்தது.

பலநாடுகள்.... பயணங்கள் தொடர்கின்றன... டிராவல்ஸ் நிறுவன எம்.டி.யே எத்தனை நாளுக்கு சகோதரிக்கு பாரமாய் இருப்பாய்... உனக்கென வாழ்க்கையை தேர்ந்தெடு... என்று கட்டாயப்படுத்தவே.. அவனுக்காய் பிறந்த யுரேகாவையும் திருமணம் செய்துகொண்டான்.

குடும்பம், வீடு, குழந்தையும் வந்தாச்சு... செல்வேந்தரன் கால்கள் செயலற்று போனதை மறந்து போயிருந்தான். நத்தைக்கூடு போல ஒரு பெட்டிக்குள் துவங்கிய வாழ்க்கை இப்போது உலகின் பல திசைகளில் விரிந்திருந்தது.

மகன் 10 வயதிலேயே லேப்டாப்பில் ஹங்கேரி பையனோடு பேசுகிறான். அதை அவ்வப்போது பார்த்து செல்வேந்திரனுக்குள் மகிழ்ச்சி.

இத்தனையும் இருந்தாலும்... வீட்டின் மாடி போர்சனில் உபயோகப்படுத்தமுடியாத பொருள்களுக்கு மத்தியில் தூங்கிககொண்டிருக்கிறது ஒரு நத்தைக்கூடு.

ஹார்டுடிரைவ் செயலற்றுப்போன நிலையில்.

Wednesday, May 27, 2009

"நச்" சுனு நாலு ஹைக்கூமுகத்தை தொலைத்து
விரல்களால் பேசுகிறோம்
பதிவு அரசியல்

கண்கள்
சாப்பிடும் போதைமருந்து
ஆபாச திரைப்படம்

சுவர்களும்
சுவாசிக்கின்றன
ஜன்னல் வழியாய்

இந்த சாக்கடையில்
எந்த பெருச்சாளி பெட்டர்?
அரசியல்!

Monday, May 25, 2009

மழையும் ஒரு தேவதையும்


நீ
வரப்போகும்
நாள் தெரியும்
மழைக்கு...

என் வீட்டு
வாசல்களை
சுத்தமாக்கி செல்கிறது

உன் வருகைக்காகவே
தென்மேற்கு
பருவக்காற்றும்
ஜன்னல் வழியாய்
வயலின்
வாசிக்கிறது.

உனக்காக
எழுதிய கவிதைகள்
தாழ்வாரங்களில்
காகிதக்கப்பாலாய்
பூ சுமக்கின்றன

அடித்துப்பெய்யும்
மழையில் - நீ
கதவுகளை
தாளிடுகிறாய்...


மழை நீரோடு
கரைகிறது
என் காதல்.

Saturday, May 23, 2009

சில ரோஜாக்களும் ஒரு கவிதையும்

உனக்கு நியாபகம் இருக்கிறதா...
முதல் சந்திப்பின் போது
சில ரோஜாக்களை
காகிதத்தில் சிறையெடுத்து
என் கரம் தழுவி
வாழ்த்து சொன்னாய்..

அப்போதே தெரியாமல் போனது...
இந்த ரோஜாக்களை போல
நானும் உன்னிடம்
சிறைபடுவேன் என்று!

மீனலோசனி.

இது மொழியா... விழியா...


ஈரம் வழியும் விழிகளின்
மொழி - உனக்கு
புரியாத பாசைதான்.

இந்த நீர்த்துளியின் பின்னால்
ஒழிந்திருக்கும்
உன் நினைவுகளை
புரட்டி படி.

இது மொழியா...
விழியா...
எனப்புரியும்.

மீனலோசனி.

நான் அழகானவள்


நான் அழகானவள்
என்ற கர்வம்
இப்போது
இருப்பதில்லை...

நீ சொன்ன
பொய்களில்
நான் அழகானவள்
என்பது தான்
மிகப்பெரிய
பொய்யாய்
கேலிபேசிய
நாளில் இருந்து...

மீனலோசனி.